இலவச அரிசிக்கு பதிலாக பணத்தை கொடுக்க முடியாது- முதலமைச்சர் நாராயணசாமி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதுவை அரசின் மாநில அளவிலான உயர்மட்ட குழு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசுத்துறை இயக்குனர்கள், அரசுசாரா உறுப்பினர்களான பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசுசாரா உறுப்பினர்கள் பேசும்போது, ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படாதது குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தனர். குறிப்பாக இலவச அரிசி வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- புதுவையில் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. அதற்கான நிதியையும் ஒதுக்கினோம். ஒன்பது மாதங்கள் தரமான இலவச அரிசியும் வழங்கினோம். ஆனால் ஏற்கனவே இருந்த என்.ஆர். காங்கிரஸ் அரசு இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. எனவே அரிசிக்கு பதிலாக பணத்தை கொடுக்க மத்திய அரசு கூறியது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. புதுவை அரசின் நிதி மூலம் வழங்கப்படுவதை அரிசியாகத்தான் வழங்குவோம் என்றோம். ஆனால் கவர்னர் அதை பணமாக கொடுக்க கூறினார். அரிசி வழங்குவதையும் தடுத்து நிறுத்தினார்.

இலவச அரிசியே வழங்குவது என்று மீண்டும் அமைச்சரவையில் முடிவு எடுத்தோம். அந்த முடிவினை கவர்னர் ஏற்காமல் அதுதொடர்பான கோப்பினை டெல்லிக்கு அனுப்பினார். உள்துறை அமைச்சகமும் பணம்தான் போடக்கூறியது. அதை எதிர்த்து நான் வழக்குப்போட்டேன். அதில் தீர்ப்பு கூறிய தனிநீதிபதி அரிசிக்கு பதிலாக பணம்போட வேண்டும் என்று கூறினார். அந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளேன்.

ரங்கசாமி தலைமையிலான ஆட்சி இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் நடப்பதாக அவர்களது கூட்டணி கட்சியே புகார் கூறியது. அதை தவிர்க்க நாம் மத்திய அரசின் நிறுவனமான இந்திய உணவுக் கழகத்திடமே கொள்முதல் செய்வதாக கூறினோம். அதற்கு அப்போது மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வானும் ஒப்புக்கொண்டார். அதையும் தடுக்க உள்துறை மூலம் கவர்னர் கடிதம் எழுதினார் என அவர் தெரிவித்தார்.