சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா

மதுரை: சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசும் காவல் துறையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவுகளின் தேவையில்லாமல் பைக்குகளில் சுற்றக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.