மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் உருக்கம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

என் மகன் எடப்பாடி பழனிசாமி சிறு வயது முதல் ஏழை- எளிய மக்களோடு பழகி பொதுமக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான். கோனேரிப்பட்டி அரசு பள்ளியில் படித்த என் மகன், அப்போது நாங்கள் குடியிருந்த விவசாய தோட்டத்திற்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும், தினசரி நடந்து போய் படித்து வந்தான்.

பள்ளி படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான். தினசரி காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவர் என் மகன். ஏழை-எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.