கோவை சரக புதிய டி.ஐ.ஜி.,யாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்பு

புதிய டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு... கோவை சரக டி.ஐ.ஜி., யாக நியமிக்கப்பட்ட நரேந்திரன் நாயர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி., யாக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் கடந்த வாரம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னையில் பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் கோவை சரக காவல்துறையின் டி.ஐ.ஜி., நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,''கோவை சரகத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும். போலீசார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நலன் மீது சிறப்பு அக்கறை செலுத்தப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும், என்னிடம் அல்லது அலுவலகத்தில் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவறிழைக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார்.