கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள் அமல்... ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை: புதிய விதிகள் அமல்... வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள 3 புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.

அது என்னென்ன என தெரிந்து கொள்வோம். இந்த விதிகள் கடந்த ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்பட்டு இருந்தது. கிரெடிட் கார்டு லிமிட் அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் மற்றும் கார்டை ஆக்டிவேட் செய்ய கார்டு வழங்குநர் ஓடிபி எண்ணை பயனர்களிடம் கேட்பது போன்றவைதான் இந்த மூன்று புதிய விதிகள்.

இதன் மூலம் இனி கிரெடிட் கார்டுகளை பயனர்களுக்கு வழங்கும் நிறுவனங்கள் அந்த கார்டின் கிரெடிட் லிமிட்டை பயனர்களிடம் தெரிவிக்காமல் அதிகரிக்க முடியாது. அதற்கு பயனரின் ஒப்புதல் மிகவும் அவசியம். அதேபோல மாற்றப்பட்ட தொகை குறித்த விவரத்தையும் பயனரிடம் அந்த பணி நிறைவு பெற்றதும் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்னர் கிரெடிட் லிமிட்டை உயர்த்த பயனர்களின் அனுமதி வேண்டியதில்லை.

கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாக்கும் வகையில் டோக்கனைசேஷன் முறையை கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி. அதனால் இனி பயனர்களின் பெயர், கார்டு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அதனால், பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் அவசியமாகிறது. இது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பொருந்தும்.


அதேபோல கிரெடிட் கார்டு கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பயனர்கள் அதனை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் அதனை ஆக்டிவேட் செய்ய பயனரிடமிருந்து கார்டை வழங்கியவர்கள் ஓடிபி பெற வேண்டும். அப்படியும் அந்த கார்டை 7 வேலை நாட்களுக்குள் பயனர் ஆக்டிவேட் செய்ய மறுத்தால் அதனை செயலிழக்க செய்ய வேண்டும். அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.