விரைவு ரயில்களுக்கான புதிய கால அட்டவணை இன்று முதல் அமல்

சென்னை: புதிய கால அட்டவணை... விரைவு ரயில்களுக்கான புதிய கால அட்டவணை, இன்று முதல் அமலாகிறது. 34 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக, 60 நிமிடங்கள் வரை, பயண நேரம் குறையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம், சேவை அதிகரிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட விபரங்களுடன், புதிய கால அட்டவணையை, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டது. அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

திருவனந்தபுரம் - மதுரை விரைவு ரயில், ராமேஸ்வரம் வரையிலும்; பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயில், துாத்துக்குடி வரையிலும், காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு விரைவு ரயில், புதுச்சேரி வரையிலும் நீட்டித்து இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி விரைவு ரயில், டிச., 20ம் தேதி முதல், வியாழன் தவிர, மற்ற அனைத்து நாட்களில் இயக்கப்படும். தெற்கு ரயில்வேயில், 34 விரைவு ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஐந்து நிமிடம் முதல் அதிகபட்சமாக, 60 நிமிடங்கள் வரை பயணம் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் தரப்பில் கூறுகையில், 'ரயில்வே கால அட்டவணை தயாரித்து வெளியிடுவது என்பது வழக்கமானது. 'ஒரு நாளுக்கு முன் வெளியிடுவது என்ன நியாயம்? இதனால், பயணியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது' என்றனர்.