வனப்பகுதியில் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்து தின்ற 9 பேர் கைது

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் அப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியை சமைத்து தின்ற 9 பேரை வனத்துறையினர் வளைத்து பிடித்து கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்ட மசினகுடி வனப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி நுழைபவர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மசினகுடி வனப்பகுதியில் கடமானை வேட்டையாடி சமைத்து தின்ற லிங்கன், அருண், பொம்மன், குமார், மாதேஷ், பினு, பசவராஜ், கோடால், பண்ட ராஜ் ஆகியம் 9 பேரை வனத்துறையினர் கைது செய்து தலா 20 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் அதே பகுதியில் சந்தன மரத்தை வெட்டிய முகமதலி, ரவி ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 9 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யபட்டு தலா 20 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டது.

இரண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது. மேலும் வனப்பகுதியில் அத்துமீறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.