சட்டசபை தேர்தலுக்கு பின் நிதிஷ்குமார் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவார் - சிராக் பஸ்வான்

பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில், மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனது லோக் ஜனசக்தி கட்சி சார்பில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிராக் பஸ்வான் பேட்டி அளிக்கையில், நேரத்துக்கு நேரம் மாறுபவர் என்ற பெயர் நிதிஷ்குமாருக்கு உண்டு. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் நீண்ட அரசியல் போருக்கு பின்னர் நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். அவர் பா.ஜ.க. உடனான உறவை முறித்துக்கொண்டார். பின்னர் மீண்டும் அந்த கூட்டணியில் அவர் சேர்ந்து கொண்டார். நிதிஷ்குமார் தேசிய அளவில் பிரதமருக்கு எதிராக தன்னை ஒரு போட்டியாளராக கருதுகிறார் என்று கொண்டார்.

மேலும் அவர், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக விஷத்தை கக்கினார். ஆனால் 2 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவை கழற்றி விட்டு, மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவினார். நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் பிரசாரத்தில் லாலுவை நிதிஷ்குமார் கடுமையாக தாக்கி வந்துள்ளார். ஆனால் அவர் மன நிலையைப் பொறுத்தமட்டில், சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் மீண்டும் பா.ஜ.க. அணியில் இருந்து மாறலாம் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக சிராக் பஸ்வான் பேட்டி அளித்தபோது, நிதிஷ் குமார் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். வீடுகளுக்கு குழாய் நீர் வழங்குதல், கான்கிரீட் கொண்டு பள்ளங்களை நிரப்புதல் போன்ற திட்டங்களில் ஊழல் நடத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி, அதில் முதல்-மந்திரி உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என தெரிவித்தார்.