பீகார் முதல்மந்திரியாக நிதிஷ்குமார் 7-வது முறையாக பதவியேற்பு

பீகார் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருக்கு, ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 74 இடங்களில் வெற்றி பெற்றது. வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. கூட்டணியில் அதிக இடங்களை கைப்பற்றபோதும் நிதிஷ் குமார் தான் முதல்மந்திரியாக தேர்ந்தேடுக்கப்படுவார் என பாஜக தெரிவித்தது. இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் நேற்று ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து பாட்னாவில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருக்கு, ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ் குமாருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இதுதவிர 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். பீகார் முதல்மந்திரியாக நிதிஷ்குமார் தொடர்ந்து 4 முறையாகவும், மொத்தமாக 7-வது முறையாகவும் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.