பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் நிலங்களை சமப்படுத்துகிறது

கடலூர்: கடந்த 2006ம் ஆண்டு தாங்கள் கையகப்படுத்திய கீழ் வளையமாதேவி கிராம நிலங்களை என்எல்சி நிறுவனம் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமப்படுத்தும் பணியைச் செய்து வருகிறது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி ‘என்எல்சி இந்தியா லிமிடெட்’ நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அருகிலுள்ள நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் முயன்று வருகிறது. இதற்காக சேத்தியாதோப்புக்கு அடுத்த மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களுக்குச் சமமான இழப்பீட்டுத் தொகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் மற்றும் நிலங்களைக் கொடுக்கும் வீட்டுக்கு ஒருவருக்கு அந்த நிறுவனத்தில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு தாங்கள் கையகப்படுத்திய கீழ் வளையமாதேவி கிராம நிலங்களை என்எல்சி நிறுவனம் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமப்படுத்தும் பணியைச் செய்து வருகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் செயலை அந்த நிர்வாகம் துவங்கி உள்ளது. ஏழைப் பொதுமக்கள் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் என்எல்சியின் இந்தப் பணிக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.