அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்,வீரர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவரை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்பின் அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ந்தேதி அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது, அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது. இந்த முடிவில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளதாக பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இதனால் அமித் ஷா கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார் என தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி அமித் ஷா குணமடைந்ததாக கூறிய தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார்.