இந்து ஆலயங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிப்பு

விசேட அறிக்கை வெளியீடு... கொவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைவாக அனைத்து இந்து ஆலயங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலயங்களில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து (அந்த ஆலயத்திற்குட்பட்ட கட்டடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒரு சந்தர்ப்பத்தில் வழிபடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கையானது 100 நபர்களுக்கு மேல் வழிபடக்கூடிய ஆலயங்களில் 50 நபர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சமூக இடைவெளியைப் பாதுகாத்து ஒரு சந்தர்ப்பத்தில் 50 தனிநபர்கள் வழிபடக்கூடிய இடவசதி இல்லாத ஆலயங்கள் சாதாரணமாக வழிபடக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத நபர்களை மாத்திரம் வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

ஆலயத்தினுள் நுழையும் போது ஆட்களை அடையாளம் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கைகழுவுதல், முகக்கவசம் (Mask) அணிதல், தனிநபர்களின் இடைவெளியை பேணுதல் ( ஒரு மீட்டர் இடைவெளி) உட்பட ஏனைய அனைத்து சுகாதார, மற்றும் காவல் துறையினரது வரையறைகள் / கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும். ஆலயங்களில் வழமையான பூஜை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவிதக் கூட்டுச் செயற்பாடுகளையோ ஒன்றுகூடலையோ மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படல் வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் எல்லா ஆலயங்களும் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.