பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு ‘அம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வருகிற 20-ந்தேதி மேற்கு வங்கத்துக்கும், ஒடிசாவுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பனில் உள்ள துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த 1-ம் எண் புயல் கூண்டானது நேற்று இறக்கப்பட்டு, 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.