சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பாராட்டு

சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு... சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கைகள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சிபிசிஐடி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை, கிளைச்சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கையைப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கைகள் உள்ளதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் சிபிசிஐடி போலீசார் நீதியை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் என்றும் உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி போலீசார் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறிய நீதிபதிகள், சாட்சியம் அளித்த காவலர் ரேவதியிடம் செல்போனிலும் பேசினர்.

அத்துடன் கோவில்பட்டி 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி எங்கும் நடைபெறக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணை முடிந்த நிலையில் விரிவாக உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இதனிடையே ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை இரண்டு தனித்தனி கொலை வழக்குகளாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.