முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவக்கல்லூரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர்: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை... திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டுவரும் கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் முறைகேடாக மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து வெள்ளக்கோயில் அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வநாயகி எலெக்ட்ரோபதி மருத்துவமனை மற்றும் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது தமிழ் நாட்டில் பயிற்று விக்க அனுமதி வழங்கப்படாத பிஇஎம்எஸ் மற்றும் எம்டிஇஎச் ஆகிய படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது தெரியவந்தது.

இதை அடுத்து முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரிக்கு சீல் வைத்த அதிகாரிகள் கல்லூரி உரிமையாளர் தரணியா மற்றும் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.