ஒன்றா… இரண்டா... 379 உணவுகளை செய்து மருமகனை திணறடித்த மாமியார்

ஆந்திரா: அடி ஆத்தாடி இவ்வளவு உணவு பதார்த்தமா?... ஆந்திராவில் புதுமாப்பிள்ளைக்கு அவரது மாமியார் 379 வகையான உணவு பதார்த்தங்களை செய்து வைத்து அசத்தியுள்ளார்.

ஆந்திரா மாவட்டம் கோதாவரி மாவட்டம் விருந்தோம்பலுக்கு பேர் போனது. குறிப்பாக வீட்டு மாப்பிள்ளையை உபசரிப்பதில் வித்தியாசம் காட்டுவார்கள். வீட்டு சமையலில் பதார்த்தங்களின் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதில் அப்பகுதி மக்களிடையே பகிரங்க போட்டியும் நடக்கும்.

இந்த வகையில், அண்மையில் மணமுடித்த முரளிதர் - குசுமா ஜோடி, சங்கராந்தியை முன்னிட்டு குசுமா வீட்டுக்கு வருவதாக இருந்தது. மாப்பிள்ளை முரளிதரை எப்படியாயினும் ஆச்சரியப்படுத்தியே ஆகவேண்டும் என்று குசுமா வீட்டினர் ஒன்றுகூடி திட்டம் போட்டனர்.

கோதாவரி மாவட்ட விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையி்லும் தங்களது வரவேற்பு அமைய வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அதிகபட்ச எண்ணிக்கையில் பதார்த்தங்களை வீட்டிலேயே சமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

விருந்தோம்பலில் வீட்டுக்கு வீட்டு போட்டியிடும் கோதாவரியில், முந்தைய மாமியார் வீட்டு சாதனையாக 365 பதார்த்தங்கள் இடம்பெற்றிருந்தது. அதனை விஞ்சும் வகையில் ஒரு எண்ணிக்கையேலும் பதார்த்தங்களை கூட்டுவது என குசுமா வீடு முடிவு செய்தது.

முழு மூச்சிலான அவர்களது ஏற்பாட்டின் நிறைவில் ஒட்டுமொத்தமாக 379 பதார்த்தங்களை செய்து முடித்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சங்கராந்திக்கு மாமியார் வீடு வந்த மாப்பிள்ளை கிறுகிறுத்துப் போனார்.

அதிலும் பெண் வீட்டார் போட்டியிட்டு மாப்பிள்ளைக்கு ஊட்டிவிட்டதில் அவர் திணறிப்போனார். அத்தனை உணவிலும் சிறிதேனும் ருசி பார்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததில், அதிலேயே மாப்பிள்ளை வயிறு நிரம்பியதாக அறிவித்தார்.

வீட்டு மாப்பிள்ளையை ஆனந்த ஆச்சரியத்துக்கு ஆளாக்க வேண்டும் என்றும், கோதாவரி மாவட்டத்தின் விருந்தோம்பலை மாப்பிள்ளை வீட்டாருக்கு பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கோடும் 379 பதார்த்தங்களை தயாரித்ததாக’ குசுமா வீட்டினர் தெரிவித்துள்ளனர்.