கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை கடந்த 10 நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 51 ஆயிரத்து 785 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 114.80 அடியை எட்டியுள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 904 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 116 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கும் கடந்த 15 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கடல்மட்டத்தில் இருந்து 696.16 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 694.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து அந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.