மலேசியாவில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

மலேசியாவில் கடந்த 2018-ல் நடந்த பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன. பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

பின்னர் மகாதீர் முகமது பிரதமரானார். ஆனால் இந்தக் கூட்டணி அரசு 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஆட்சி கவிழ்ந்ததால், மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்நிலையில் பிரதமர் முஹைதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்து விட்டது. புதிய அரசை அமைப்பதற்கு தமக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அன்வார் இப்ராஹிம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். நேற்று மதியம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த அன்வர் இப்ராஹிம் ஆட்சி அமைப்பது தொடர்பாக மன்னரை சந்திக்க அனுமதி கோரியிருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடவுளுக்கு நன்றி. தற்போது எனக்கு உறுதியான, போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுகுறித்து மன்னரிடம் தெரிவிப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை, மலாய்தான் அதிகாரப்பூர்வ மொழி என்பதை நிலைநிறுத்தும் வகையில் எனது அரசு செயல்படும் என்று கூறினார். எனினும் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக அன்வர் இப்ராஹிம் கூறியதை ஆளும் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.