அர்ச்சகர்கள் கொரோனாவால் பாதித்ததால் பத்மநாபசுவாமி கோயில் மூடல்

10 அர்ச்சகர்கள், 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வரும் 15ம் தேதி வரை திருவனந்தபுரம் கோயில் மூடப்படுகிறது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 10 அர்ச்சகர்கள் உட்பட 12 ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இக்கோயில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனம் அனுமதிக்கப்படாத நிலையில், தினசரி பூஜைகள் தந்திரிகளால் மேற்கொள்ளப்படும் என்று கோயிலின் நிர்வாக அதிகாரி ரத்தீஷன் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு தலைமை அர்ச்சகர்கள், எட்டு துணை அர்ச்சகர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்குவார்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் தற்போது அறிகுறியில்லாமல் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இக்கோயில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் மாத இறுதியில்தான் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. கேரளாவில் இதுவரை 2,60,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இறப்பு எண்ணிக்கை 930 ஆக உள்ளது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது.