உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை நிராகரித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் நிராகரித்தது... ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உலக சுகாதார அமைப்பு முன்வைத்த பரிந்துரையை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

பாகிஸ்தானில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 702 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 2,255 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நாடு முழுதும் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும் என, சுகாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பலிதா மஹிபலா, பஞ்சாப் மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானின் பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்தான், பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. எனவே, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விட்டு விட்டு அமுல்படுத்தவேண்டும். இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாக்., பிரதமரின் சுகாதார ஆலோசகரான ஜாபர் மிர்சா கூறியதாவது:

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நாட்டில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பல கடினமான கொள்கை முடிவுகளை எடுத்துவருகிறோம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கடைகள், தொழிற்சாலைகள், மசூதிகள், மக்கள் போக்குவரத்து ஆகியவற்றிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.