இஸ்ரேலில் பாலஸ்தீன வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதி மற்றும் இஸ்ரேலின் புதிய தலைநகர் ஜெருசலேமில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜெருசலேம் நகரில் உள்ள புகழ்பெற்ற மசூதியின் முன்பு இஸ்ரேல் போலீசார் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கையில் துப்பாக்கியுடன் வந்த பாலஸ்தீன வாலிபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அதன்பின் அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதன் பின்னர் இஸ்ரேல் போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று ஒரு இடத்தில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மீண்டும் போலீசாரை சுட முயற்சித்தார்.

இதனால் போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதேசமயம் பாலஸ்தீன வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த சம்பவம் குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.