பாஜக தேசிய செயலாளர்களாக பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே நியமனம்

பாஜக கட்சியில், தேசிய அளவில் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டார். இதில் மகாராஷ்டிராவில் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளும், முன்னாள் மாநில மந்திரியுமான பங்கஜா முண்டே தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுனில் தேவ்தர், விஜயா ரகத்கர் ஆகியோர் தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மும்பையை சேர்ந்த வி.சதீஷ் தேசிய இணை பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவராக ஜமால் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஹீனா காவித் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாருக்கும் தேசிய துணை தலைவர், தேசிய பொதுச் செயலாளர் பதவிகள் வழங்கப்படவில்லை. இதேபோல தேசிய இளைஞர் அணி தலைவராக இருந்த மும்பையை சேர்ந்த எம்.பி.யும்., மறைந்த பாரதீய ஜனதா தலைவர் பிரமோத் மகாஜனின் மகளுமான பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா புதிய தேசிய இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்களுக்கு இந்த முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.