அனுமதியின்றி மருந்தை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது; ராஜஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக கூறும் கொரோனா மருந்தை அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த, கரோனில் மற்றும் சுவாசரி ஆகிய இரண்டு ஆயுர்வேத மருந்துகளை தனது பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த மருந்துகள் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறும் மருந்தை விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா கூறியதாவது:

பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸுக்கான ஆயுர்வேத மருந்தை ஆய்வக பரிசோதனை செய்ய அவரிடம் இருந்து ராஜஸ்தான் அரசுக்கு கோரிக்கை எதுவும் வரவில்லை. இது தொடர்பாக யாருக்கும் அனுமதியும் கொடுக்கப்படவில்லை. மேலும் அந்த மருந்து சரியானது என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் சான்றளிக்கவில்லை. எனவே அந்த மருந்தை அனுமதியில்லாமல் மற்றவர்களுக்கு கொடுப்பது குற்றம்.

எனவே, அந்த மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியஅரசு கடந்த 21-ம் தேதி, மருந்துகள் சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஆயுஷ்அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் யாரும் கொரோனா வைரஸுக்காக ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.