கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் நடனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்படுவதால், அவர்கள் மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் சிலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் ஏற்படும் மன உளைச்சலை போக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ள அரசு பல் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் குழுவாக இணைந்து நேற்று மருத்துவமனை வளாகத்தில் திரண்டு ‘பிளாஸ் மாப்’ எனப்படும் எதிர்பாராத ஆடல் பாடல் நடனத்தில் ஈடுபட்டனர்.

அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது உற்சாக நடனத்தை வெளிப்படுத்தினர்.இதில் மருத்துவ ஊழியர்களும் பங்கேற்று தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு நடனம் மற்றும் ஆடல் பாடலுடன் குத்தாட்டம் போட்டு கொரோனா நோயாளிகள் தங்களது மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர்.