வடமாநிலங்களை நிலைகுலைய வைத்துள்ள கனமழையால் மக்கள் வெகுவாக பாதிப்பு

புதுடில்லி: கனமழையால் பெரும் பாதிப்பு... வடமாநிலங்களை புரட்டிப்போட்டுவரும் கனமழைக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் மழை பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது. பீஸ் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் மீட்கப்பட்டனர். மண்டியில் வரலாற்று பெருமை வாய்ந்த புரானா பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.குலு மலைப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .பார்வதி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இடைவிடாது 36 மணி நேரம் மழை பொழிந்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருகி ஓடியது. ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மூன்று பகுதிகளை இணைக்கக்கூடிய பாலம் சரிந்து விழுந்தது. இதே போன்று பஞ்சாப் மாநிலம் சட்லஜ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சண்டிகரில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனிடையே மத்திய அமைச்சர் அமித் ஷா பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களை தொலைபேசியில் அழைத்து அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.