தி.மு.க. மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்- பழனிமாணிக்கம் எம்.பி.

அ.தி.மு.க. வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்ததுடன், கட்சிகள், தனிநபர் கிராமசபை கூட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் என்று பெயர் மாற்றப்பட்டு நேற்று காலை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்கள், மாரியம்மன்கோவில் பகுதியில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும். ஞானம் நகரில் வேகத்தடை அமைக்க வேண்டும். சமுத்திரம் ஏரியை சுற்றுலாத்தலமாக்கி படகு சவாரி விட ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் பழனிமாணிக்கம் எம்.பி. பேசும்போது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது பிரச்சினைகளை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளையும் மு.க. ஸ்டாலின் தீர்த்து வைப்பார் என்றார்.

இறுதியில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பாடுபட்டு, மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம் என கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று எழுதப்பட்ட பேனரில் கையெழுத்து போட்டனர். பழனிமாணிக்கம் எம்.பி., நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோரும் கையெழுத்து போட்டனர்.

பின்னர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, சட்டத்தை பற்றி புரியாமல் கிராமசபை கூட்டத்திற்கு தடை விதித்திருக்கின்றனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களால் கூட்டத்தை நடத்தலாம். பெரும்பாலான ஒன்றியக்குழு தலைவர்களும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் இருக்கின்றனர். இருந்தாலும் அரசின் உத்தரவை மதித்தும், தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும் மக்கள் கிராமசபை கூட்டம் என பெயர் மாற்றப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் தி.மு.க.வினர் கிராமசபை கூட்டங்களை நடத்தியபோது இவர்கள்(அ.தி.மு.க.) எங்கே சென்றார்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களின் குறைகளை கேட்பது ஒரு தவறா?. தோல்வி பயத்தில் கிராமசபை கூட்டங்களுக்கு அ.தி.மு.க. தடை விதிக்கிறது. அ.தி.மு.க. மீது பொதுமக்களிடையே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி காலத்தில் கிராமங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைத்தன. ஆனால் இப்போது அந்த சலுகைகள் கிடைக்கவில்லை. கிராமசபை கூட்டம் நடத்தியதற்கு அவர்கள்(அ.தி.மு.க.) எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள எல்லா சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறினார்.