ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்தாததால் சுதந்திரமாக உலாவும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்

சுதந்திரமாக சாலைகளில் சுற்றித்திரியும் மக்கள்... போடி பகுதியில் ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டதால் பொதுமக்கள் சுதந்திரமாக சாலைகளில் சுற்றி வருகின்றனர். இதனால் போடியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. போடி பகுதியிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் ஜூலை 10 ஆம் தேதி முதல் ஜூலை 23 வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

நகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பு துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூட வேண்டும். பெட்ரோல் நிலையங்கள், வங்கிகளில் பொதுமக்கள் சேவைக்கு தடை விதித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள், ஏ.டி.எம். இயந்திரங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற அறிவிப்பு வெளியிடும்போது ஊரடங்கு அல்லது பொதுமுடக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நகராட்சியின் அறிவிப்பில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தாததால் பொதுமக்கள் வழக்கம்போல் சாலைகளில் நடமாடி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் வழக்கம்போல் சென்று வருகின்றனர்.

காவலர்கள் சாலைகளில் செல்வோரை அழைத்து எச்சரிக்கும்போது, வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறப்பதற்கு மட்டுமே தடை செய்து அறிவித்துள்ளனர். ஊரடங்கு என்றோ, பொதுமக்கள் நடமாடக் கூடாது என்றோ அறிவிப்பில் கூறவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் காவல்துறையினர் செய்வதறியாது திகைக்கும் நிலை உள்ளது.

இதே நிலைதான் தேனி மாவட்டம் முழுவதும் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், போடி நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து முழு பொதுமுடக்கு என அறிவித்தால் மட்டுமே பொதுமக்கள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றுவதை தடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.