இதய நோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொரோனாவால் இறப்பதற்கு அதிக வாய்ப்பு

இதயநோய், நீரிழிவு போன்றவை உள்ளவர்கள் ஆரோக்கியமான நோயாளிகளை காட்டிலும் கொரோனாவால் இறப்பதற்கு 12 மடங்கு வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தங்கள் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயநோய், நீரிழிவு போன்றவை உள்ளவர்கள் ஆரோக்கியமான நோயாளிகளை காட்டிலும் கொரோனாவால் இறப்பதற்கு 12 மடங்கு வாய்ப்பு அதிகம் என அதிர்ச்சி தருகிறது.

கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை புரிந்து கொள்வதற்காக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுபாடு மையம் அந்நாட்டில் ஜனவரி 22 முதல் மே 30 வரை தொற்று ஏற்பட்ட 1.3 மில்லியன் மக்கள் மற்றும் 1,03,700 இறப்புகளை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒன்றுக்கும் மேல் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 5-ல் ஒருவர் (19.5%) இறக்கிறார். அதுவே ஆரோக்கியமானவர்களில் இந்த இறப்பு விகிதம் 1.6% ஆக உள்ளது. நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது (45.4%).


நலமுடன் உள்ளவர்களில் இந்த எண்ணிக்கை 7.6% மட்டுமே. 13 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதில், 14% பேர் அதாவது 1.8 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டது, அதில் 5% பேர் இறந்தனர், 2% பேர் தீவிர சிகிச்சையில் இருந்தனர்.லேசான அல்லது அறிகுறிகள் இல்லாதவர்கள் பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருந்ததால் உண்மையான இறப்பு சதவிகிதம் இதை விட குறைவாக இருக்கக்கூடும்.

கடுமையான நோய் மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கின்றன. குறிப்பாக ஆண்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு இதில் பாதிப்பு அதிகம். கொரோனா உடைய ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இரு மடங்கு அதிகம். அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளில் இருதய நோய் (32%), நீரிழிவு நோய் (30%) மற்றும் நுரையீரல் நோய் (18%) ஆகியவை மிகவும் பொதுவான நாள்பட்ட நோய்களாக இருந்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.