கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

கோயம்புத்தூர் மாநகர் பகுதியிலுள்ள சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை 1995ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பகுதியில் போராட்டங்களும், பெரியாரியல் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு அப்பகுதிக்குச் சென்ற மர்ம நபர்கள் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலை தகவலறிந்து அங்கு குவிந்த திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். அங்கு சென்ற குனியமுத்தூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து, அருகிலுள்ள கடைகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவி சாயம் ஊற்றியவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிது நேரத்தில் காவி சாயத்தை தண்ணீர் ஊற்றி அகற்றி பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகளை அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டி கறுப்பர் கூட்டம் யு ட்யூப் சேனலுக்கு பாஜகவினரும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கறுப்பர் கூட்டம் சேனலுக்கு தடை விதிக்க வேண்டும், அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டுமென பாஜகவைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை முன்வைத்து சமூக வலைதளங்களில் பெரியாரிய சிந்தனையாளர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடையே கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது பெரியார் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ சில சமூக விரோதிகள் , பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வி‌ஷமத்தனமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

தன் வாழ்நாளிலேயே இது போன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப் பொடியாக்கியவர் தந்தை பெரியார். கடலூரில் அவர் மீது செருப்பு வீசப்பட்ட இடத்திலேயே பின்னர் அவருக்கு சிலை வைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே அதனைத் தலைவர் கலைஞர் திறந்து வைத்தார் என்பது வரலாறு” என்று குறிப்பிட்டுள்ளார்.