அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு அனுமதி... அரசியல் பொதுக் கூட்டங்களை நடத்திக்கொள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும் சில தளர்வுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அன்லாக் 5.0 ஊரடங்கு தளர்வில் சில மாற்றங்களை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவின் கீழ் மாநில அரசுகள் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மட்டும், அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பாகவே 100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையிலான, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மூடப்பட்ட அரங்குகளாக இருந்தால் இருக்கை கொள்ளளவில் 50 சதவீத அளவுக்கு அல்லது அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்.

திறந்தவெளி பொதுக் கூட்டமாக இருந்தால், மைதானத்தின் இட வசதிக்கேற்ப பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை அனுமதிக்கலாம். அதேசமயம், பங்கேற்பாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்தந்த மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு, அதை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே நோய்த்தொற்று அச்சத்திற்கு இடையேயும், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.