நிபந்தனைகளுடன் ஆலப்புழாவில் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 732 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் நீர்வழி போக்குவரத்து அதிக அளவில் உள்ளதால் கேரள மாநிலம் ஆலபுழா மாவட்டத்தில் சில நிபந்தனைகளுடன் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.

சிறிய அளவிலான படகு முதல் பெரிய அளவிலான படகுகள் வரை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த படகு போக்குவரத்து உள் மாவட்டங்களுக்கு மட்டுமே என அரசு அறிவித்துள்ளது.