கருணைக் கொலைக்கு உட்படுத்தி கொள்ள செல்பவருக்கு விசா வழங்கக்கூடாது என மனு

புதுடில்லி: விசா வழங்கக்கூடாது... மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் கருணை கொலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக, சுவிட்சர்லாந்து செல்லும் நண்பருக்கு, 'விசா' வழங்கக் கூடாது எனக்கோரி, அவரது தோழி புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.


குணப்படுத்த முடியாத அல்லது மிகுந்த வலியை தரும் நோயினால், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு, நோயுடன் போராட முடியாதவர்கள், மருத்துவர்களின் துணையுடன் கருணை கொலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வது, 'ஈஸ்தனேஷியா' என அழைக்கப்படுகிறது.

பெல்ஜியம், கனடா, கொலம்பியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில், கருணை கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், புதுடில்லியை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதன் விபரம்:புதுடில்லியை சேர்ந்த என் நண்பர், 'மையால்ஜிக் என்சிபாலோமையலிட்டிஸ்' என்ற, ஒருவித நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான உடல் சோர்வு, வலி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் தீவிரமாக இருக்கும். அவர்களுடைய வேலைகளை கூட அவர்களால் செய்ய முடியாது. கடந்த 2014 முதல், என் நண்பருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. தற்போது, முழுக்க படுத்த படுக்கையாகி விட்டார். வீட்டில் ஓரிரு அடிகள் மட்டுமே நடக்க முடிகிறது.

புதுடில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பரவலுக்கு பின், சிகிச்சையை தொடர முடியவில்லை. உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சிகிச்சை பெற, அவருக்கு நிதி வசதி இருக்கிறது. இந்நிலையில், அவர் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சென்று, தன்னை கருணை கொலைக்கு உட்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதில் பிடிவாதமாக உள்ளார்.

சிகிச்சைக்கு செல்வதாகக் கூறி, 'விசா'வுக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் இறந்துவிட்டால், இவரது வயதான பெற்றோரின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகிவிடும். எனவே, அவர் சுவிட்சர்லாந்து செல்ல விசா அளிக்கக் கூடாது. மேலும், அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.