பல்லாரியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு

பல்லாரி: பல்லாரியில் பிரதமர் வாக்கு சேகரிப்பு... கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி பல்லாரியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி மேடை ஏறியதும் அவருக்கு மாலையும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னர் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து கட்சி நாட்டை கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி வாக்கு அரசியலை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

வாக்குகளைப் பெறுவதற்காக பயங்கரவாத அமைப்புகளை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று கூறிய மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்கள் கொந்தளிப்பதாகக் கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானதிலிருந்து பஜ்ரங்தள் அமைப்புக்கு ஆதரவாக முழக்கமிடும் மோடி, பல்லாரி கூட்டத்திலும், ஜெய் பஜ்ரங்தள் என கோஷமிட்டார்.

இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத்தில் இரட்டை இஞ்சின் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இருந்தாலும் எங்கள் இரட்டை இஞ்சின் அரசு வேலை செய்கிறது என்று கூறுகின்றனர். பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. மக்களின் வாழ்வைப் பற்றி பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என விமர்சித்துள்ளார்.