பிரதமர் மோடி நெருக்கடியை திறம்பட கையாளுகிறார் - கருத்துக்கணிப்பில் தகவல்

இந்திய பிரதமர் மோடியின் அரசு நெருக்கடியை திறம்பட கையாளுவதாக பல்வேறு கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர் கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கின. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த பிரச்சனைகளால் பொருளாதார பிரச்சனைகள் மோசமாகின. ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு, 83 ஆயிரம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 3 ஆயிரம் இறப்புகள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ரஷியா போன்ற வல்லரசு நாடுகளை விட எண்ணிக்கை மிகக்குறைவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் ஒப்பிடப்படும் போது மோடி இந்த நெருக்கடியை நன்கு எதிர்கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கருத்துக்கணிப்பில் 93.5 சதவீதம் பேர் மோடி கொரோனா வைரஸ் நெருக்கடியை திறம்பட கையாளுவதாக தெரிவித்து உள்ளனர். 93 சதவீதத்துக்கும் அதிகமான பேர் மோடி அரசு நெருக்கடியை திறம்பட கையாளும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.