எகிப்தில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

எகிப்து: எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

எகிப்து நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரை சிறப்பு நிகழ்வாக அந்நாட்டு பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார்.

அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு நடத்தப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்குச் செல்வது இதுவே முதல் முறை. இந்நிலையில், எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த 3,799 இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். முன்னதாக, 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து தாவூதி போரா சமூகத்தால் புதுப்பிக்கப்பட்ட அல்-ஹக்கிம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

மசூதியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கிம் மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பின், கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.