கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடகா பயணம்... பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) கர்நாடகா சென்றார். தனி விமானத்தில் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிக்பள்ளாபூர் சென்ற அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைத்தார்.

பின்னர் பெங்களூரு வந்து இங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்ஃபீல்டு இடையே சுமார் 13 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து, தவணகெரே வந்த பிரதமர் மோடி, பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. அவர்களின் கனவு மோடிக்கு கல்லறை தோண்டுவது என்றால், நாட்டினுடைய, கர்நாடக மக்களின் நம்பிக்கை தாமரை மலர்வது என்பது தான்.

உலகமே இப்போது இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்தியா நமது கர்நாடகத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது. கொரோனா காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதை நான் பாராட்டுகிறேன். நேற்று ஹூப்ளியில் தொழில் பூங்கா அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். நமது புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதற்கு மோடி காரணமல்ல. நீங்கள் அளித்த வாக்கே காரணம். இதேபோல கர்நாடகாவின் புகழ் உலகெங்கும் ஒலிக்கவேண்டும். எனவே நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்து கர்நாடகாவின் புகழை உலகெங்கும் ஒலிக்கவைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.