வேளாண் சட்டங்கள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் நாடகமாடுகின்றனர் - விவசாயிகளில் ஒருவர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகளும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் காலவரையற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளன. தொடர்ந்து போராட்டங்கள் நீடித்து கொண்டே செல்கின்றன.

தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்கமான கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் 12வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவண்ணம் உள்ளனர். குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை தொடர வேண்டும் என வலியுறுத்தி பதாகை வைத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரு விவசாயி வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பேசுகையில், அரசியல் கட்சிகள் அரசியல் நாடகமாடுகின்றன. அவர்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், அவர்கள் அதை பாராளுமன்றத்தில் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.