வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை முனியாண்டவர் கோயில் வளாகத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.

தமிழ்நாடு சுற்றுலா துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குநர் முகமது பாரூக் முன்னிலை வகித்தார்.

இதில், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஹாலந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக மாட்டு வண்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அமர வைத்து கிராமத்திலுள்ள தெருக்கள் சுற்றி விழா திடலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கபடி, கயிறு இழுத்தல், இளவட்டக் கல் துôக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதையடுத்து, தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்ற கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவற்றை வெளிநாட்டுச் சுற்றலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.