பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் வழங்கபடும்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ரொக்க பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களிடம் தகவல்கள் பெறப்பட்டு வருகிறது.அத்துடன் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதே போல் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில நடைபெறறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனவரி 3ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ம் தேதி அன்று பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.