மருத்துவக் கலந்தாய்வு தொழில் நுட்பக் கோளாறால் தள்ளி வைப்பு

தொழில் நுட்பக் கோளாறால் தள்ளி வைப்பு... அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குவதாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலில் விடை குறிக்கும் பகுதி மாறியிருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (DGHS) ஆன்லைனில் நடத்துகிறது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்டோபர் 27-ம் தேதி (இன்று) முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.ஜி.எச்.எஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அக்டோபர் 28-ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்த புதிய தகவல்கள் www.mcc.nic.in என்ற இணையதளம் மூலமாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை நடத்துவதில் தொடங்கிய குளறுபடி, முடிவுகள் வெளியிடுவது, கலந்தாய்வு நடத்துவது என ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்கிறது. சரிவர முன்னேற்பாடுகளைச் செய்யாமல் மாணவர்களை வதைப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க அரசு செயல்படுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.