உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

உரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை... பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில், உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள்இ இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பயிர்ச் செய்கையில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். தட்டுப்பாடு இன்றி உரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மற்றும் தனியார் துறையின் இறக்குமதியாளர்களுக்கு வேண்டிய பின்புலத்தை தயார் செய்து கொடுத்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இறக்குமதியில் தங்கி இருக்காது நாட்டுக்கு தேவையான உரத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உர உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அவசியமான முதலீடுகளை கமத்தொழில் அமைச்சு வழங்கும். கடந்த போகத்தில் 25,000 ஹெக்டெயர்கள் சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல் 30% வீதத்தை தாண்டியுள்ளதாக கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். பெரும்போகத்தில் முழு பயிர் நிலத்தில் 25% வீதத்தை சேதனப் பசளையை பயன்படுத்துவதற்கான இயலுமை பற்றி உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.