வரத்து அதிகரித்தது... பங்கனப்பள்ளி மாம்பழம் விலை சரிய துவங்கி உள்ளது

பங்கனப்பள்ளி மாம்பழங்கள் சீசன் களை கட்டியுள்ளதால், அவற்றின் விலை சரிய துவங்கி உள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பல வகை மாம்பழங்கள் விளைகின்றன. இதில் பங்கனபள்ளி மாம்பழங்களுக்கு என, தனிச்சுவை உள்ளது. சீசன் காலங்களில், இவற்றை வாங்கி சுவைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவர்.

இந்த ஆண்டு பங்கனப்பள்ளி மாம்பழங்கள் சீசன், சற்று தாமதமாக களை கட்ட துவங்கியுள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும், பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு அவை விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. சென்னை, மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக பழ மார்க்கெட்டிற்கும், அவற்றின் வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் எதிரொலியாக கிலோ, 70 முதல், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பங்கனப்பள்ளி மாம்பழங்கள், தற்போது கிலோ, 50 ரூபாயாக குறைந்துள்ளது.

இங்கு வரும் மாம்பழங்களை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகளும், பொதுமக்களும், மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச் சென்று வருகின்றனர். இம்மாத இறுதி வரை, பங்கனப்பள்ளி மாம்பழங்களின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.