கொரோனாவை விரட்ட ரத்ன சூத்திர மந்திரம் கூற பிரதமர் அறிவுறுத்தல்

கொரோனாவை விரட்ட ரத்ன சூத்திர மந்திரத்தை கூறுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ வலியுறுத்தி உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் விஞ்ஞானரீதியிலான அணுகுமுறைகளை கண்டறிந்து வரும் நிலையில், அண்மை நாட்களாக இலங்கையில் மத நம்பிக்கைகள் பக்கம் கவனம் செலுத்தும் புதிய போக்கு உருவாகி வருகிறது.

கொரோனாவை விரட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்த பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விஷேட பூஜை வழிபாடு நடத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையிலும், ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு ஆசி கோரும் வகையிலும், சகல பௌத்த விஹாரைகளிலும் ரத்ன சூத்திர மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ளுமாறும், அதே போல் நாடு முழுவதிலும் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கஸ்தலங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறும் பிரதமரும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களிலே, மக்கள் அனைவரும் இடர் தீர்ந்து நலமோடு வாழவேண்டி, நாளாந்தம் இடம்பெற்று வரும் பிரார்த்தனை வழிபாடுகளோடு, சிறப்பு ஏற்பாடாக, விசேட பிரார்த்தனை வழிபாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை இலங்கைத் திருநாட்டில் உள்ள சகல வணக்கஸ்தலங்களிலும் ஒரே நேரத்தில் நடத்திக் கொள்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.