சென்னையில் தொடங்கியது…. தனியார் பள்ளி வாகன சோதனை

சென்னை:

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளதால் நாளை மறுநாள் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் சுமார் 1000 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னையில் அயனாவரம், அண்ணாநகர், வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ், வளசரவாக்கம், கே.கே.நகர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வட்டார போக்கு வரத்து அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் சோதனை இன்று முதல் தொடங்கியது. மேலும், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குன்றத்தூர் போன்ற இடங்களிலும் இன்று தொடங்கியது.

தனியார் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா? வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளதா? அவசரகால வழி உள்ளதா? முதலுதவி சிகிச்சை பெட்டி, முக்கியமாக ஒவ்வொரு பஸ்களிலும் கேமராக்கள் உள்ளனவா? போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர்.

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறைவாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பின்னர் மீண்டும் ஆய்வு செய்து பயன் படுத்தப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.