சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 23 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


சிவகங்கை : மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

இதையடுத்து இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இந்த இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்து உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட முழுவதும் வருகிற 23ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வருகிற அக்டோபர் 24 முதல் 27 ஆம் தேதி மருது பாண்டியர் குருபூஜை மற்றும் 31 பசும்பொன்னில் நடைபெறும், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.