எதிர்ப்பு போராட்டங்கள் பாரதீய ஜனதாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை - அஜித் பவார்

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றய நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கொரோனா வைரசை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் ‘மராட்டியத்தை காப்பாற்றுங்கள்’ (மகாராஷ்டிரா பச்சாவ்) போராட்டம் நடத்தப்படும். என கூறியிருந்தார்.

இது குறித்து துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியதாவது:- இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது அறிவார்ந்த செயல் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீசார் மற்றும் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் வைரசை எதிர்த்து போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு ஊக்கம் அளித்து மேலும் வலிமை ஊட்டுவதற்கு பதிலாக போராட்டத்தில் இறங்குவது என்பது கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் வீரர்களை அவமதிக்கும் செயலன்றி வேறில்லை. இதுபோன்ற தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மராட்டிய பாரதீய ஜனதாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.