காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் மக்கள் தொகைக்கேற்ப பேருந்துகளை இயக்க பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை

காஞ்சிபுரம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் முக்கிய வழித்தடங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடமிருந்து கேட்ட போது, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கல்பாக்கம், மதுராந்தகம், ஓரிக்கை, செங்கல்பட்டு உள்பட பணிமனைகளில் பேருந்துகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்துடன் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஓட்டுநர், நடத்துநர் விடுப்பு எடுத்தாலும் மாற்று ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள் அத்துடன் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. அதன் காரணமாக ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார். அரசு இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.