புதுச்சேரி மாநில அரசு சந்திக்கும் புதிய பிரச்னை... மின்துறை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

புதுச்சேரி: கடும் எதிர்ப்பு... புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முன்பணம் செலுத்தி மின் மீட்டர் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கக் கோரும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

இத்தகைய சூழலில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ப்ரீபெய்டு மின் மீட்டர் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, நுகர்வோர் தங்களது மின் உபயோகத்தை அறிந்து, கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், மின் கட்டணம் உயரும் என பல்வேறு தரப்பினரும் அஞ்சுகின்றனர்.

இதனிடையே புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சோனாம்பாளையத்தில் உள்ள மின் வாரிய அலுவலகம் வரை பேரணி நடத்தினர். புதுச்சேரி அரசு மின் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இருப்பதாகவும், ப்ரீபெய்டு மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த நவீன மீட்டர்கள் பொருத்துவதற்கு தனியார் நிறுவனத்துடன் ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்