விரைவில் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை; அமைச்சர் தகவல்

அமைச்சர் தகவல்... மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மின்கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மின்கட்டணம் பழைய முறையிலேயே வசூலிக்கப்படுகிறது. இதில் முறைகேடுகள் ஏதுமில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது.

குறிப்பாக, ஊரடங்கு காரணமாக மின்கட்டண மதிப்பீடு செய்வதற்காக ஊழியர்கள் செல்ல முடியாத காரணத்தினால், 4 மாதத் தொகையை மொத்தமாக செலுத்துவதினால், மின்கட்டண தொகை அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறைக்கு பதிலாக, மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.