செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி பல்வேறு தவறான தகவல் பரப்பப்படுகிறது .. ராதாகிருஷ்ணன் விளக்கம்

திருச்சி:பிளாஸ்டிக் அரிசி என்பது தவறான தகவல் ... சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,

“தமிழ்நாட்டில் முதன்முறையாக 2877 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 51,307 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 2021 - 22 ஆண்டில் 14.84 லட்சம் விவசாயிகளுக்கு 10,292 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை 15.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 10 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல் பரப்பப்படுகிறது . இது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு வருகிறோம். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

மேலும் ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதுவும் விரைவில் களையப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேசன் கடைகளை அரசின் சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று பாழடைந்த, இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களும் நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு மாற்றப்படும்” என அவர் கூறினார்.